அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.... இந்த வாழ்த்தோடு பிள்ளையார் பற்றி அறிந்த அறியாத செய்திகள் பலவற்றை இங்கு பகிர்கின்றேன்.
விநாயகப்பெருமானை பற்றிய பல அறிந்த அறியாத விஷயங்கள்.
விநாயகர் என்பதன் பொருள் {நாதமும் விந்துவும்}
விநாயகர் என்ற சொல்லுக்கு “வி” – இல்லாமை. “நாயகன்” – தலைவன். விநாயகர் – மேலான தலைவர், தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் என்று பொருள்.
ஓம் அநீஸ்வராய நம: என்னும் மந்திரத்திற்கு – தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் என்பதே பொருள். ஸ்ரீ ஆதி சங்கரர் தாம் அருளிய கணேச பஞ்சரத்னத்துள் “அநாயகைக நாயகம்”என்று கணபதியைப் போற்றுகின்றார். அநாயக-ஏக-நாயகம்= அதாவது தனக்கு மேலோரு நாயகரில்லாமல் தானே ஏக நாயகனாக இருப்பவர் என்பது இதன் பொருள். வழிபடுவோரின் விக்கினங்களை {இடையூறுகளை} போக்குபவராதலின் இவருக்கு விக்னேஸ்வரன் என்றும் கணங்களுக்குத் தலைவராயிருப்பதால் கணநாதன், கணபதி என்று அன்புடன் வணங்கப்படுகிறார்.
