Tuesday, September 4, 2018

வீர இளைஞருக்கு -விவேகானந்தரின் வீர முரசு

வீர இளைஞருக்கு -விவேகானந்தரின் வீர முரசு 

வீரர்களுக்கே முக்தி எளிதாகக் கிடைக்கிறது ,பேடிகளுக்கு அல்ல. வீரர்களே, கச்சையை வரிந்துகட்டுங்கள். மகாமோக மாகிய எதிரிகள் உங்கள் முன் உள்ளார்கள்.பெருஞ் செயல்களுக்குத் தடைகள் பல என்பது உண்மைதான், என்றாலும் இறுதி வரை விடாமல் முயலுங்கள். மோகமாகிய முதலையிடம் சிக்கிய மனிதர்களைப் பாருங்கள். அந்தோ,இதயத்தைப் பிளக்கவல்ல அவர்களின் சோகக்  கூக்குரலைக் கேளுங்கள். வீரர்களே!

கட்டுண்டவர்களின் தலைகளை வெட்டி எறியவும், எளியவர்களின் துயரச் சுமையைக் குறைக்கவும், பாமரர்களின் இருண்ட உள்ளங்களை ஒளிபெறச் செய்யவும் முன்னேறிச் செல்லுங்கள். ‘அஞ்சாதே அஞ்சாதே ‘ என்று முழங்குகிறது வேதாந்த முரசு. பூமியில் வசிக்கின்ற மனிதர்கள் அனைவருடைய இதய முடிச்சுக்களையும் அது அவிழ்த்து எறியட்டும்!

எழுந்திருங்கள், எழுந்திருங்கள், நீண்ட இரவு கழிந்து கொண்டிருக்கிறது, பகற்பொழுது நெருங்கிக் கொண்டிருக்கிறது, அலை எழுந்துவிட்டது, அதன் பெருவேகத்தை எதிர்த்து நிற்க எதனாலும் முடியாது. என் இளைஞர்களே,வேண்டுவதெல்லாம் உற்சாகமே !

நம்புங்கள், நம்புங்கள், ஆணை பிறந்துவிட்டது, இறைவனின் கட்டளை பிறந்துவிட்டது— பாரதம் முன்னேறியே ஆக வேண்டும், பாமரர்களும் ஏழைகளும் நலம் பெற வேண்டும். இறைவனின் கையில் கருவிகளாக இருப்பதற்காக மகிழ்ச்சி கொள்ளுங்கள், ஆன்மீகக் கருவிகளாக இருப்பதற்காக மகிழ்ச்சி  கொள்ளுங்கள்.

உன்னிடம் நேர்மை உள்ளதா? உயிரே போனாலும் நீ சுயநலமில்லாதவனாக இருக்கிறாயா? உன்னிடம் அன்பு உள்ளதா? அப்படியானால் பயப்படாதே, மரணத்திற்கும் அஞ்ச வேண்டாம். என் பிள்ளைகளே, முன்னோக்கிச் செல்லுங்கள். உலகம் முழுவதும் ஒளியை எதிர்பார்த்து நிற்கிறது, ஆவலுடன் காத்து நிற்கிறது. அந்த ஒளி இந்தியாவிடம் மட்டுமே உள்ளது.

என் மகனே, உறுதியாகப் பற்றி நில்.உனக்கு உதவுவதற்காக யாரையும் லட்சியம் செய்ய வேண்டாம். மனித உதவிகள் அனைத்தையும்விட இறைவன் எல்லையற்ற மடங்கு பெரியவர் அல்லவா? புனிதனாக இரு. இறைவனிடம் நம்பிக்கைவைத்திரு, அவரையே எப்போதும் சார்ந்திரு—- நீ சரியான பாதையில் போகிறாய்; உன்னை எதுவும் எதிர்த்து நிற்க முடியாது.

நீங்கள் உண்மையிலேயே என் குழந்தைகளானால் எதற்குமே அஞ்ச மாட்டீர்கள் எதற்காகவும் நிற்க மாட்டீர்கள். சிங்கங்களெனத் திகழ்வீர்கள். நாம் இந்தியாவையும், ஏன், உலகம் முழுவதையுமே விழித்தெழச் செய்தாக வேண்டும் கோழைத் தனம் உதவாது. முடியாது என்பதை நான் ஏற்றுக்   கொள்வதில்லை. புரிகிறதா? உயிரே போவதானாலும் உண்மையைப் பற்றி நில்லுங்கள்.

‘ஓளி மிக்கவனே, எழுந்திரு. எப்போதும் தூயவனே எழுந்திரு. பிறப்பு இறப்பு அற்றவனே எழுந்திரு. எல்லாம் வல்லவனே, எழுந்து உனது உண்மை இயல்பை வெளிப்படுத்து. இந்த அற்ப நிலைகள் உனக்குத் தகுந்தவை அல்ல’ என்று சொல்லுங்கள்.

ஒழுக்க நெறியில் நில். வீரனாக இரு. முழுமனத்துடன் வேலை செய். பிறழாத ஒழுக்கம் உடையவனாக இரு. எல்லையற்ற துணிவு உடையவனாக இரு. மதத்தின் கொள்கைகளைப் பற்றி உன் மூலையைக் குழப்பிக் கொள்ளாதே. ஒவ்வொருவரையும் நேசிக்க முயற்சி செய்.

வஞ்சனையால் பெரும் பணி எதையும் செய்ய இயலாது. அன்பாலும் உண்மையை நாடுவதாலும் பேராற்றலாலும் தான் பெரும் செயல்கள் நிறை வேற்றப் படுகின்றன. எனவே உனது ஆண்மையை வெளிப்படுத்து.

எனது துணிவுடைய இளைஞர்களே, நீங்கள் பெரும் பணிகளைச் செய்ய பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். குட்டி நாய்களின் குறிப்பைக் கண்டு நடுங்க்காதீர்கள்; வானத்தில் முழங்கும் இடியோசைக்கும் அஞ்ச வேண்டாம்; நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள்.

நண்பா, ஏன் அழுகிறாய்? உனக்குள் எல்லா சக்தியும் உள்ளது. பலசாலியே,உனது எல்லாம் வல்ல இயல்பை வரவழை. மூவுலகும் உனது காலடியில் அமரும். வெல்வது ஆன்மா ஒன்றே, ஜடமல்ல. தங்களை உடம்பாகக் கருதுகின்ற முடர்கள் தான், ‘நாங்கள் பலவீனர்கள்’ என்று கதறுவார்கள். நாடு வேண்டுவது துணிச்சலும் விஞ்ஞான அறிவும் தீரமும் பேராற்றலும் அளவில்லா ஊக்கமுமே. பேடித்தனம் உதவாது. சிங்கத்தின் தீரமுள்ள செயல் வீரனையே திருமகள் நாடுவாள். பின்னால் பார்க்க வேண்டியதே இல்லை. முன்னே செல்லுங்கள்! எல்லையில்லாத வலிமையையும் எல்லையில்லாத ஊக்கமும் எல்லையில்லாத தீரமும் எல்லையில்லாத பொறுமையும் நமக்கு வேண்டும். அப்போது தான் பெரும் பணிகளை ஆற்ற இயலும்.

வலிமையின்மையே துயரத்திற்கு ஒரே காரணம். நாம் பலவீனர்களாக இருப்பதால் கெட்டவர்களாகிறோம். நம்மிடம் பொய்யும் திருட்டும் கொலையும் வேறு பாவச் செயல்களும் இருப்பதற்குக் காரணம் நமது பலவீனமே. நாம் துன்பமடைவது நமது பலவீனத்தாலேயே. நாம் இறப்பதும் நமது பலவீனத்தால்தான்.நம்மைப் பலவீனர்களாக்க ஒன்றும் இல்லாதபோது மரணமும் இல்லை, துயரமும் இல்லை.

நமது நாட்டிற்கு இப்போது வேண்டியது இரும்பை ஒத்த தசைகளும் எக்கைப்போன்ற நரம்புகளுமே. எதனாலும் தடைபடாத,உலகின்   விந்தைகளையும் மறை பொருள்களையும் ஊடுருவிப் பார்க்கவல்ல, கடலின் அடியாழம்வரை செல்ல நேரிட்டாலும் கருதியதை முடிப்பதற்கான ஆற்றல் பெற்ற, ஆன்மீக பலம் கொண்ட மனங்களே இப்போதைய தேவை.

லட்சியம் உடையவன் ஆயிரம் தவறுகள் செய்தால் அது இல்லாதவன் ஐயாயிரம் தவறுகள் செய்வான் என்பது உறுதி. ஆதலால் லட்சியம் மிகவும் தேவை.

ஆம்! உங்கள் இயல்பை மட்டும் உணர்ந்துவிட்டால் நீங்கள் தெய்வங்களே. உங்களை இழிவு படுத்துவதாக எப்போதாவது எனக்குத் தோன்றுமானால், அது உங்களை மனிதர் என்னும் போதுதான்.

முதலில் நாம் தெய்வங்களாவோம். பிறகு பிறரும் தெய்வங்கலாபாத் துணை செய்வோம். ‘ஆகுக, ஆக்குக’—- இதுவே நமது தாரக மந்திரம் ஆகட்டும்.

எழுந்திருங்கள், உழையுங்கள். இந்த வாழ்வு எத்தனை நாளைக்கு? உலகில் வந்துவிட்டீர்கள். அதற்கு அறிகுறியாக ஏதேனும் விட்டுச்செல்லுங்கள்.இல்லாவிட்டால், உங்களுக்கும் மரங்கள் மற்றும் கற்களுக்கும் என்ன வேறுபாடு? அவையும் தோன்றுகின்றன, கெடுகின்றன, மறைகின்றன.

உனக்குள் இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்து. அதைச் சுற்றி ஒவ்வொன்றும் அதற்கு இசைவாக ஒழுங்கு படுத்தப்படும்.இறக்கும் வரை பணிசெய். நான் உன்னுடன் உள்ளேன்; நான் போனபின், எனது ஆன்மா உன்னுடன் உழைக்கும். இந்த வாழ்வு வரும், போகும். செல்வமும் புகழும் போகமும் சிலநாட்களுக்கே. உலக ஆசையில் மூழ்கிய ஒரு புழுவாக இறந்தாலும், உண்மையைப் போதித்துக்கொண்டே செயல்களத்தில் உயிரை விடுவது நல்லது.மிக நல்லது.


நல்ல சிந்தனைகள் நல்லெண்ணங்கள் இளைஞர்களுக்கு நல்லது
"குத்தூசி"

6 comments:

 1. அருமையான உற்சாக மூட்டிய உரை.
  இதில் "இவ்வுலகில் வாழ்ந்ததற்கு அடையாளமாய் எதையாவது விட்டுச் செல்லுங்கள் இல்லையேல் உங்களுக்கும், கற்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்" எனக்கு பிடித்த வார்த்தை எனது வீட்டின் வரவேற்பு வாசகம்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி கில்லர்ஜி

   Delete
 2. எழுச்சியூட்டும் உரை. இன்னொரு விவேகானந்தர் வந்தால்தான் தூக்கம் விலகும்! அவரை இந்நாள் இளைஞர்கள் மறந்து விட்டார்கள் / அறியாமல் இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வலையுலகில் பிரபலமான நீங்கள் வருகை தந்து கருத்தை பகிர்ந்தது அறிந்து மிக சந்தோஷம் ஸ்ரீராம் சார்

   Delete

 3. சென்னையில் வசித்த போது இராம் கிருஷ்ணா மடத்தில் இருந்து வெளியிடும் விவேகானந்தரின் நூல்களை வாங்கி படிப்பது என் வழக்கம்.... அதன் பின் அமெரிக்க வந்தபின் அவரைபற்றி படிப்பது மிகவும் குறைந்துவிட்டது...நீண்ட இடைவெளிக்கு பின் இன்று உங்கள் தளத்தில் அவரின் உரையை படித்தேன்...பலரும் பரப்புக்காக ஏதோ எழுதும் வேளையில் இது போன்ற நல்ல பதிவுகளை வெளியிட தொடங்கிய உங்கள் முயற்சிகளை பாராட்டுகிறேன் குத்தூசி... உங்களின் மற்ற பதிவுகளையும் படித்தேன் தரமாக இருக்கிறது. எனக்கு நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக உங்கள் தளம் வந்து படிக்கிறேன். உங்களது புது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மதுரைத்தமிழன் சார் உங்களின் முதல் வருகைக்கும் விரிவான கருத்து பகிர்விற்கும் நன்றிகள் சார்

   Delete

மனமென்னும் பாத்திரத்தை மனதார நிரப்புங்கள்!

மனமென்னும் பாத்திரத்தை மனதார நிரப்புங்கள்! மனிதர்களைப் படிப்பதுதான் வாழ்க்கைக்கான அடிப்படை தேவை. ஆனால், அதை என்னவோ நாமே பலமுறை கீழே விழுந...